அப்பாவின் டீக்கடைக்கு எதிரில்தான் பேப்பரை விரித்து முதன் முதலாக வியாபரத்தைத் தொடங்கினோம்.

தேரோட்டத் திருவிழா. ஆழித்தேருக்கு பக்கத்தில் வீடு என்பதால் வாசல் பக்கம் மக்கள் கூட்டம். கையில் கொஞ்சம் காசு இருந்தது. அண்ணனும் நானும் பக்கத்தில் உள்ள தலையாட்டி மளிகைக் கடையில் அரைபாக்கெட் சிகிரெட்டும் கொஞ்சம் மிட்டாய்களும் வாங்கி வீட்டு வாசலில் கடை விரித்தோம். சின்னப்பசங்க என்பதால் விளையாட்டாய் வியாபாரம் ஆனது. 

எப்போதும் கோபப்படும் அப்பா ஏனோ அன்று எதுவும் சொல்லவில்லை. முதல் லாபம் குறுகுறுப்பைத் தந்தது. பின்னர் விடுமுறை நாட்களில் இன்னும் சில கள்ளிப்பெட்டிகளை அடுக்கி கடையை விரிவாக்கினோம். அப்பாவின் கடன்கள் ஒரு புறமுமும் எங்கள் கடை மறுபுறமுமாக ஒருசேர வளர்ந்தன. டீக்கடை நொடித்ததும் அப்பா எங்கள் பெட்டிக் கடையை மளிகைக் கடையாக விரிவாக்கி எடுத்துக் கொண்டார். 

படிப்பு, வேலை என்று திசைகள் மாறினாலும் அவ்வப்போது “தொழில்” செய்யும் ஆசை எட்டிப்பார்ப்பதுண்டு. நெருக்கமான அலுவலக நண்பர்கள் கூடும்போது சில பீர் டின்க்குப் பிறகு சுத்தமான மரச்செக்கு எண்ணெய் முதல் மல்டி கரன்ஸி இன்வெஸ்ட்மன்ட் வரை பேசுவோம். அப்புறம், மீண்டும் பேசுவோம். மீண்டும் மீண்டும் பேசுவோம்.

ஒரு கட்டத்தில் பழைய பெட்டிக்கடை பன்னீர்செல்வம் உள்ளிருந்து ட்ரிகர் செய்ய, சிங்கப்பூரில் ஒரு சின்ன grocery shop ஐ எடுத்தேன். வியாபாரம் break even point ஐ நெருங்கும் போது கொரோனா வந்தது. மீண்டும் பீர் டின்கள் உடைந்தன. நண்பர்களும் யதார்த்தத்துக்குத் திரும்ப, “ரிடையர் ஆனதும் ஊர்ல போய் பெருசா…” என்று முடித்துக் கொண்டோம்.

நானும் பட்டாயா, பேங்காக் என்று வாழ்ந்துவிடலாம் என்ற எண்ணும்போது, “அவனை அவனே கைவிட்டான்! அதற்குப் பிறகுதான் நிகழ்ந்தது அற்புதம்”எனும் பிரான்ஸிஸ் கிருபாவின் கவிதை வரிகளைப்போல என்னை நானே நிறுவனமாக்கிக் கொள்ளும் வாய்ப்புத் தேடி வந்திருக்கிறது.

இம்முறை திட்டமிடல் இல்லை. வழக்கம் போல் நண்பர்கள் இருக்கின்றனர்.

என் கணிப்பொறிக்குள் ஆயிரம் அலாவுதீன்கள். விசைப்பலகைக்குள் ஆயிரம் ஆயிரம் அற்புத விளக்குகள். 

உரச உரச அற்புதங்கள் நிச்சயம் எழும்!

ALAR PTE LTD! See less