கார்பரேட் கைக் கூலி. இந்த வரி அப்பட்டமாய்ப் பொருந்துவது IT ஊழியனுக்குத்தான். 2K வின் தொடக்க காலம். ஒருநாள் என் அக்கா வழி மாமாவுக்கு இணையத்தைப் பற்றி Internet Explorerஐ திறந்து சொல்லிக் கொண்டிருந்தேன். நான் செய்வதையெல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டே வந்தவர் கடைசியாக, “இவ்ளோ படிச்சும் டைப் அடிக்கிற வேலைக்குதானே போற” என்றார்.
இளங்கலை வரை தமிழ் வழிக்கல்வி. 2 வரிகள் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேச வராது. கொத்தாகச் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு சென்னைக்கு பஸ் ஏறியபோது IT நிறுவனங்களுக்கும் BPO நிறுவனங்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாது. ஆனாலும், 7G ரெயின்போ காலனியில் பைக்கை அக்கு அக்காக பிரித்துப் போட்டு பின்னர் அசம்பிள் பண்ணும் கதாநாயகன் அளவுக்கு அன்றைய Microsoft தொழில்நுட்பங்கள் மட்டும் தெரியும்.
தொடக்க காலத்தில் பெருநகரமும், நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் அழகிய receptionistகளையும் தவிர வேறதுவும் பயத்தைத் தந்ததில்லை. மீட்டிங் என்றால் விஜயண்ணா மாதிரி ஸ்கிரிப்ட் + மாடுலேசன் சகிதம் ஒத்திகை பார்த்து சமாளித்துவிடலாம். அதிலும் கேள்வி பதில் வரும்போது அரகஜா வைத்த அப்பாவி மாதிரி muteல் பதுங்க வேண்டும்.
சில வருட BPO அனுபங்களும், இன்டர்வியூ படையெடுப்புகளும் துணிச்சலைத் தந்தன. பிறகு கும்பகோணத்து கொம்பு முளைத்தது. நேர்காணல் எடுப்பவர்களை நேர்காணலிலேயே நக்கல் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் திமிரைத் தந்திருந்தது. மொழி கொஞ்சம் பழகியிருந்தது.
BPO விலிருந்து IT பெரு நிறுவனத்திற்குள் Team Leader ஆக நுழைந்தபோது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். என் teamக்கு வந்து சேர்ந்த பெங்களூரு இளைஞன் முதல் வாரமே சம்பளம் போதவில்லை என போர்க்கொடி உயர்த்தினான். நான்கைந்து நாட்களாக அவனைச் சமாதனம் செய்ய முயன்று எந்தப் பலனும் இல்லை. வேறு வழியின்றி HR க்குப் போகலாம் என்று முடிவு செய்தோம். “உன் சம்பளம் எவ்வளவு? எவ்வளவு வேண்டும்?” என்று கேட்டேன். அவன் சொன்ன பதிலைக்கேட்டு தலை கிறுகிறுவென சுழன்றது. அவனுக்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டிருந்த சம்பளம் அவனுடைய Team Lead ஆன என் சம்பளத்தைவிட நான்கு மடங்கு அதிகம். 18 ம் நாள் அவனை முந்திக் கொண்டு resignation paper அனுப்பினேன்.
“நிறுவனங்களுடனான விசுவாசம்” என்ற வரியை அழித்துவிட்டு அந்த உறவை நேரடியான “கொடுக்கல் வாங்கல்” என்று வகுத்துக் கொண்டேன். அடுத்தடுத்து வேலைகளை மாற்றியதில் வருவாய் கணிசமாக உயர்ந்திருந்தது.
Credit Suisse நிறுவனம் பெங்களூருக்கு ஆள்
சேர்க்கும் நிமித்தமாக வந்தபோது அது ஸ்விஸ் வங்கி என்ற விபரம் கூடத் தெரியாது. (விபரம் தெரிந்தபின் “நம்மூரு பணக்காரனுங்க பணத்த பதுக்குவாங்கல்ல.. அதான் அந்த ஸ்விஸ் பேங்குல வேலை செய்றேன் என்று பெருமை பீத்திக்கொண்டதுண்டு).
ஸ்விஸ் பேங்கிலிருந்து புடுங்கி 15 லட்சம் நம்ம பேங்க் அக்கௌண்ட்ல் போடலாம் என்று மோடி ஆரூடம் சொன்ன பஞ்சாயத்துக்குப் பிறகு “Private Banking” பிரிவு நண்பர்களுடன் சேர்ந்து பிஜேபி நண்பரகளை கலாய்த்துக் கொண்டிருந்தோம். Credit Suisse நிர்வாகக் குளறுபடிகளால் வீழ்ச்சியைச் சந்தித்தபோது, “அதானிக்கு எதிரா ரிப்போர்ட் அடிச்சீங்கள்ல அதான் உங்களுக்கு இந்த ஆப்பு” என பிஜேபி நண்பர்கள் எதிர் தாக்குதல்களைத் தொடுத்தனர்.
ஆனாலும் IT வாழ்வின் பெரும் சுவாரஸ்யங்களை, அனுபங்களை, பெரும் பொருளை, நல்ல நண்பர்களை, நினைவுகளை Credit Suisse நிறுவனமே வழங்கியது. என்னதான் “கொடுக்கல் வாங்கல்” என்று சொல்லிக் கொண்டாலும் வங்கி சரிந்து விழுந்தபோது “என்னதான் இருந்தாலும் இப்படி ஆயிருக்கக் கூடாது” என கருணை கொஞ்சம் எட்டிப் பார்த்தது.
உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை தடுக்க Credit Suisse நிறுவனம் மற்றொரு ஸ்விஸ் வங்கியான UBS நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. எங்களில் பலரும் நிரந்தரமற்ற மனநிலையுடனே UBS ல் நுழைந்தோம். பலர் நிறுவனங்கள் மாறினார்கள். சிலர் உள்வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர். AI தொழில்நுட்பம் சொற்ப வாய்ப்புகளுடனும், நிறைய நிச்சயமின்மைகளோடும் உள்ளே நுழைந்தது. இப்போது அமெரிக்க கூத்துகளும் இணைந்துகொள்ள ஆட்குறைப்பு வேகம் எடுக்கத் தொடங்கிவிட்டது.
இன்று UBS-ல் கடைசிநாள். இன்றும் என்னால் ஏனோ UBS நிறுவனத்தில் முழுமையாக ஊழியனாக என்னை உணரமுடியவில்லை. Credit Suisse நிறுவனத்தில் தொடர்ச்சியிலிருந்து விடுபடுகிறேன் என்ற எண்ணமே எஞ்சி நிற்கிறது.
ஒரு பக்கம் VRS வாங்கிய விசு மாதிரி, “இந்த வேலை போனா என்ன, எதுனா நைட் வாட்ச்மேன் மாதிரி பாரு. வாழ்க்கை நல்லாருக்கும்” என மனம் பேக் ப்ராமிஸ் பண்ணுகிறது. மறுபுறம் AI தொழில்நுட்பத்தின் வசீகரம் பிரித்துப் போட்ட பைக் பாகங்களைப் போல “சிங்கப் பாதைக்கு வா சிவாஜி” என்று அழைக்கிறது. திடீர் தவெக மினிஸ்டரின் நண்பர் ஒருவர் “ஊருக்கு வா… எதாவது காண்ட்ராக்ட் வாங்கிட்டு செட்டில் ஆயிடலாம்” என்கிறார். சமீபத்தில்தான் இலக்கிய தோழமை ஒருவருக்கு கும்பகோணத்தில் பதிப்பகம் ஆரம்பிப்போம் என்று வாக்கு கொடுத்திருக்கிறேன்.
வேறென்ன… “மக்களே! நான் என்ன பண்ணனும்னு நீங்க சொல்லுங்கனு” நாலு வாட்சப் க்ரூப்ல கருத்து கேட்டுட்டு அதையும் பண்ணாம எதாவது புதுசா யோசிக்கனும்.
Thanks to Credit Suisse (a) UBS! ❤️
Adieu! See less

0 Comments