அருண் மாதேஸ்வரன் இளையராஜாவின் Biography திரைப்படத்தை இயக்குகிறார் என்ற செய்தி வெளிவந்ததும் பேஸ்புக் எங்கும் குருதி கொப்பளித்தது. அதன் உச்சமாக அருண் மாதேஸ்வரனை கொல்ல வேண்டும் என்று ஒரு பதிவு. கலை நம்மீது வன்முறையை செலுத்தக்கூடாது என்று விரும்புகிறோம். ஓரு கலைஞன் தன் கலையில் அதைச் நிகழ்த்தக் கூடாது என்று நினைக்கிறோம். ஆனால் கலைக்குத் தன்னளவில் அப்படியான எல்லைகள் இல்லை. 

கலை காதலையும், கொண்டாட்டங்களையும், துயரத்தையும் எப்படி வெளிப்படுத்துகிறதோ அப்படியே வன்முறையும் வெளிப்படுத்துகிறது. கலையில் வெளிப்படும் துயரத்தையும், காதலையும் நம்மால் இயல்பாக நம் தன்னிலையோடு இணைத்துக் கொள்ள முடிகிறது. இன்னொருவன் துயரத்தை நம் துயரைப்போல பாட முடிகிறது. வேறொருவரின் காதல் பாடலை தனக்கான பாடலாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் வன்முறை என்று வரும்போது எதிர்நிலையில் நிறுத்திவிடுகிறது. 

மனிதனின் ஆழ்மனம் அவ்வளவு பரிசுத்தமானது இல்லை. ஒரு தேர்ந்த கலைஞனின் நுட்பமான மனம் இந்த விலக்கத்தைப் புரிந்துகொள்கிறது. தன் கலையின் வழியே இந்த விலக்கத்தை குறைத்து வன்முறை நிறைந்த மனதின் பரிணாமங்களைப் நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் வழிகளைத் தருகிறது.

நேற்று DC பார்த்துக் கொண்டிருந்தேன். அருண் மாதேஸ்வரனின் வழக்கமான ரத்தமும் சதையும்தான். மது விடுதி ஒன்றில் இறுக்கமும் அழுத்தமும் ஊறிப்போன முகங்கள். கால காலமாய் படிந்துகிடக்கும் வன்முறையின் தழும்புகள். அந்த முகங்களுக்கு மத்தியில், பூரணமான மென்மையைப் போல் நாயகி தோன்றுகிறாள். திருத்தமான உடை, ஒப்பனை. நெற்றியில் கருப்பு நிறப்பொட்டு. மைக் முன்னின்று பாடத் தொடங்குகிறாள்.

“உறவுகள் தொடர்கதை….”

“உன் நெஞ்சிலே பாரம்…” எனும் வரியில் சட்டென்று வன்முறையின் ஊற்றிலிருந்து அன்பு சுரக்கத் தொடங்குகிறது. 

அங்கேயே கொஞ்ச நேரம் நின்றுவிட்டேன். ஒரு நிமிடம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான பாடல்களின் பட்டியலை யோசித்துப் பார்த்தேன்.

“என்னுள்ளம் கோயில்…” வாழ்ந்து கெட்டவனின் சுயமரியாதைக் குரல். “அழைக்கிறான் மாதவன்…” ஜீவ சமாதியைக் கண்முன்னே காண்பவனின் நடுக்கம். “உன்னை நானறிவேன்…” மற்றும் “எங்கே செல்லும் இந்த பாதை…” மனம் பிறழ்வின் உரையாடல். “தாய் மடியில் நான் தலையைச் சாய்க்கிறேன்…” சைக்கோ கொலைக்காரனின் தற்கொலைப் பாடல். “தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்…” கேட்பதற்கு தாலாட்டு போலத் தோன்றினாலும், உள்ளூரப் புதைந்திருக்கும் விரகதாபத்தின் பழங்கதைப் பாடல். தீயூட்டப்பட்ட காதலியின் நினைவு. காதல் பாடல்களின் பட்டியலில் இருக்கும் “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி” பாடல் கூட நிகழப்போகும் வன்முறைக்கு முன்னான இறுதி நன்றி நவிலல்.  

இந்தப் பாடல்களின் வரிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு பொதுத்தன்மை உண்டு. இப்பாடல்கள் வதைகளிலிருந்து எழுந்து வருகின்றன. வதை என்பது கத்தியும், இரத்தமும் வெளிப்படுத்துவது மட்டுமல்ல. கதியற்றவனின் இயலாமையைக் கடந்து செல்வது கூட வதைதான். அதன் பின்னால் இருப்பது வன்முறைதான்.

காதல் மயக்கப் பாடல்களிலும், தாலாட்டுப் பாடல்களிலும் தவழுவும் மென்மையும், மிகைபடுத்தல்களும் கனவுகளைப் போல ஒரு கட்டத்தில் கலைந்து போய்விடுகின்றன. மாறாக வதைகளிலிருந்து எழும் பாடல்களில் ஒரு அழிவற்ற தன்மை இருக்கிறது. நாம் உள்ளூர வதைகளுக்கு நெருக்கமாவே இருக்கிறோம். அதனால்தான் நம்மால் எப்போதும் அப்படியான பாடல்களுடன் இயல்பாகக் கலந்துவிட முடிகிறது. 

கொரிய இயக்குனர் கிம் கி டுக்கின் திரைப்படங்கள் மனிதன் நிகழ்த்தும் வன்முறைகளுக்கு மிக நெருக்கமான நம்மை அழைத்துச் செல்கின்றன. Bad Guy படத்தின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ள அந்தக் கதாநாயகன் கதாநாயகி மீது செலுத்தும் வன்முறையில் எவ்வித விலக்கமும் இன்றி மனமாக நாம் பங்கேற்க வேண்டும். அப்படியின்றி கிம் கி டுக்கின் கலை நிகழ்த்தும் நித்தியத்தை நம்மால் உணர முடியாது.

“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல..” என்று பாடுவது வெறும் கொண்டாட்டப் பாடலா? காலம் காலமாக ஒடுங்கிக் கிடந்த மனதின் கூக்குரலும்தானே! 

“புயலாச்சு பெரும் மழையாச்சு இந்த விளக்கு அதிலும் எரியிது..” என்ற பாடல் தத்துவப்பாடலா? தொடர் நிராகரிப்பின் மீது சுடர்விடும் விடுதலையின் ஆசுவாசம்தானே!

தொடங்கிய இடத்திற்கு வருகிறேன். அருண் மாதேஸ்வரனின் வன்முறைக்குப் பின்னால் ஒரு நுட்பமான கலையுணர்வும் இருக்கிறது. அதன் நோக்கம் மென்மையைப் புறந்தள்ளுவது இல்லை. மாறாக வதையின் இருண்ட பக்கங்களின் மீது சிறிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவது. பிறகு மீண்டும் கருணையன்றி அதே உண்மையின் இருளுக்குள் தள்ளுவது.

இளையராஜாவின் பல பாடல்களுக்கு இத்தன்மை உண்டு. DC படத்தில் “உன் நெஞ்சிலே பாரம்…” வரிக்குப் பிறகு வரும் சொற்ப அமைதிக்கும், அருண் மாதேஸ்வரனின் சிவந்த கலங்கலான காட்சிக்கும் அத்தன்மை உண்டு. See less