
80களில் காமத்தைக் கொண்டாடும் பாடல்களுக்கென ஒரு தனி இடம் உண்டு. “நேத்து ராத்திரி யம்மா”, “நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்” போன்ற பாடல்கள் அவ்வகையில் வருகின்றன. கேளிக்கை விடுதிகளில் ஆண்களை வசீகரிக்கும் நோக்கில் பெண்கள் பாடும் காபரே பாடல்கள் அல்லது பெண்ணின் உடலை போகப் பொருளாக மட்டும் ஆண் வர்ணிக்கும் பாடல்களில் இவை சேராது. அதற்கு நுட்பமான வேறு காரணங்கள் உண்டு.
80களின் காலம் வரை காமம் குறித்தான வெளிப்படையான கொண்டாங்கள் என்பவை பெரும்பாலும் ஆண்களுக்கானவை. அதில் பெண்ணின் பங்கு ஆணின் கிளர்ச்சியைத் தூண்டுவது. அல்லது “கப்பக்கிழங்கே” என்று கேலிக்கு உள்ளாவது. 90களின் “எப்படி எப்படி நீ சமைஞ்சது எப்படி” என கும்பலாக பாடும் குப்பைகள் வேறுவிதம்.
நேத்துராத்திரி, நிலாக்காயுது பாடல்களின் வணிக நோக்கம், காட்சிப்படுத்தட்ட விதம் ஆகியவற்றை விலக்கி வைத்துவிடலாம். அது வேறு விவாதம். மாறாக இந்த வகைப் பாடல்கள் காமக் கொண்டாட்டத்தை உரத்துப்பாடுகின்றன. அத்தகைய கொண்டாட்டங்களில் ஆணும் பெண்ணும் இணையாகப் பங்குபெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. அதுவும் 80களின் காலகட்டத்தில்.
80களில் காலகட்டம் என்பது பல வகைகளிலும் மீறல்களை நிகழ்த்தியது. பெண் கல்வி, பொருளாதரச் சுதந்திரம் என ஒருபுறம் புரட்சிகரமான சிந்தனைகளுன் கூடிய “ஓ! ஒரு தென்றல் புயலாகி..” வகைப் பாடல்கள். இன்னொரு பக்கம் காமம், உறவுச் சிக்கல்களின் தவிப்பை, தயக்கத்தை வெளிப்படும் “பொன்வானம்… பன்னீர்தூவுது.. வகைப் பாடல்கள்.
இன்றும் நம்மால் “பொன்வானம் பன்னீர் தூவுது..” பாடலை பொதுவெளியில் இயல்பாகப் பாடமுடிகிறது. ஆனால் காதல் ஜோடி இணையாக தன் காமத்தைப் பாடும் “நேத்து ராத்திரியம்மா..”வை பாட முடிவதில்லை. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று நமக்குப் பூடகத்தன்மை தேவைப்படுகிறது. இன்னொன்று காமத்தை folk வடிவில் உரத்துப்பாடிக் கொண்டாடுவதில் உள்ள தயக்கம். இதனால்தான் ஒரு பிறழ் உறவை “எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்..” என்று மெலடியாக பாடிவிட முடிகிறது.
இன்னொரு உதாரணம். அதே “நேத்து ராத்திரி” பாடலின் மெலடி வெர்ஷன் ஒன்று 90களில் வெளிவந்தது. “அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ.. இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ…”.
உரக்கப்பாடுகின்ற பழைய வெர்ஷனாவது பரவாயில்லை “தூக்கம் போச்சுடி” என்று சொல்லிவிட்டு “அச்சா அச்சா பச்சக்கிளி” என்று பறந்து விடுகிறது. இரண்டாவது வெர்ஷனோ இன்னும் டீப் மோடுக்குச் சென்று நேற்று இரவு என்னதான் நடந்திருக்கும் என்று அலசுகிறது.
ஒருவிதத்தில், இது பிராய்டின் Sublimation (பதங்கமாதல்) தியரின் வடிவம்தான். பொது சமூகத்தால் ஏற்கவியதால ஒன்றை, உயர்ந்த மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வடிவமாக மாற்றுவது. பூடகமும் மென்மையும் இதனை பாடல்களில் நிகழ்த்துகின்றன.
ஒரு பாடலின் political correctness என்பதை தீர்மானிப்பது அதன் நோக்கமும், அது ஏற்படுத்தும் விளைவுகளும். நோக்கத்தில் படைப்பாளியும், விளைவில் நாமும் பங்குபெறுகிறோம். ஆனால் பாடல்களோ அதனளவில் வேறு சாத்தியங்களையும் நிகழ்த்துகின்றன. அப்படித்தான் 80களின் காலத்தில் நேத்து ராத்திரியம்மாக்ளும், நிலாக்காயுதுகளும் ஆணையும், பெண்ணையும் காமம் சார்ந்த கொண்டாட்டத்தை உரத்துப் பாடி அதில் ஒன்றாக பங்குபெற வைத்தன.
நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற “நீயா நானா”வில் 80களின் பாடல்களில் நிகழ்ந்த மீறலைக் குறிப்பிட்டு (ஒரே ஒரு) வரி பேசும் வாய்ப்புக் கிடைத்தது. மேலும் “பொன்வானம்..”, “அடியே மனம் நில்லுனா நிக்காதடி..” பாடல்களின் சில வரிகளை உற்சாக மிகுதியில் கரகரத்தேன்.
மற்றபடி பீச்சில் உட்கார்ந்து பாட்டுப்பாடி அரட்டை அடிக்கும் உணர்வோடு ஒரு வித்தியாசமான நீயா நானா. நேத்து ராத்திரியம்மாவை பேச வேண்டும் என மலர்கொடிகளால் கட்டுண்ட பாக்யராஜ் போலக் காத்திருந்தேன். ஆனால் மைக் “ஒவ்வொரு பூக்களுமே” என்று கண்ணீர் சிந்தச் சென்றுவிட்டது.
மகிழ்ச்சியான இரவு! 🤍

0 Comments