
இரண்டு நாட்களாக ஆஷா போஸ்லே ரீல்ஸ்களாய் நிறைந்திருக்கிறார். எதிர்பார்த்து போலவே, “செண்பகமே.. செண்பகமே…” வில் தொடங்கி, “ஓ! பட்டர்ஃப்ளை”, “கொஞ்ச நேரம்..”, “எங்கெங்கே…”, “செப்டம்பர் மாதம்..”, “வெண்ணிலா வெண்ணிலா…” என நீண்டு “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..”யில் அமைதியுறும் பட்டியல்கள்.
தமிழில் ஆஷாவை கண்டடையும் வழி இதுதான். ஆனால் மொழியின் வழியாக ஒரு பாடகரைப் புரிந்துகொள்ள முனைவதில் சிக்கல்கள் உண்டு. உதாரணத்திற்கு ஆஷா போஸ்லேவுக்கு ழகரம் வராது. ழகரம் மட்டுமல்ல. தமிழுக்கே உரிய வேறு சில உச்சரிப்பு முறைகளும் வராது. “செண்பகமே..”வை கூர்ந்து கவனித்தால், அது “ஷென்பாகமே..” என்றுதான் ஒலிக்கும். ஆஷா தமிழ் இசைக் கூடங்களில் அதிக நேரம் செலவிட்டது உச்சரிப்பின் நேர்த்தியை நெருங்குவதற்காகத்தான்.
அவருக்குத் தன் சொந்த மண்ணில் வேறு பிரச்சனைகள். 50களில் நிலவிய அடையாளச் சிக்கல்கள். ஆஷாவைப் பற்றிய ஆரம்பகால அடையாளம் அவர் லதா மங்கேஷ்கரின் நிழல். அவர் குரல் காபரே வகை கவர்ச்சிப் பாடல்களுக்கான குரல். அவ்வளவுதான். ஆஷாவின் சாதனை என்பது தன் மீது சுமத்தப்பட்ட அடையாளங்களை உடைத்தெறிந்து தனக்கான தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டதுதான்.
1980களில் தமிழில் “செண்பகமே… செண்பகமே…” அவருக்கான பரவலான அறிமுகத்தைத் தந்திருந்தாலும், ஆஷாவின் பன்முகத்தன்மையை தமிழுக்கு அறிமுகம் செய்தது அதே 80களில் இளையராஜா இசையில் வந்த “நான் சொன்னதே சட்டம்” படத்தில்தான் பாடல்கள்தான். ஆறு பாடல்கள். ஆஷாவுக்கு மட்டும் 2 தனிப்பாடல்கள். 3 டூயட் பாடல்கள். Pop + Jazz fusion, classic, folk என பல genre களில் ஆஷாவின் குரல் தமிழில் ஒலித்தது.
பாடலில் உறைந்திருக்கும் ஜீவனையும், அதன் நுண்ணுணர்வுகளையும், துல்லியமான ஏற்ற இறக்கங்களுடன் ஒரு குரல் வெளிப்படுத்தும்போது உச்சரிப்பின் மீதான கவனத்தை நாம் சற்று தளர்த்திக் கொள்கிறோம். அதுவே ஆஷாவுக்கு நிகழ்ந்தது.
“அதிகாலை நேரக் கனவில் உன்னைப் பார்த்தேன்..”, “ஒரு தேவதை வந்தது..” பாடல்களின் வெளிப்படும் ஆஷாவின் துள்ளலான சாயல்கள் அதன்பிறகு இளையராஜா இசையமைத்த வேறு சில பாடல்களிலும் வெளிப்பட்டன.
மேலும், என்றும் இளமை குன்றாத யுவதியின் குரல் ஆஷாவின் குரல். அத்தகைய யுவதியின் குரலையே பிற்காலத்தில் A.R.ரஹ்மான் “செப்டம்பர் மாதம்” பாடலின் வழியாக தமிழுக்கு மறு அறிமுகம் செய்தார். ஆனால் இந்த அறிமுகம் இளையராஜா செய்த அறிமுகத்திற்கு முற்றிலும் வேறு திசையில் நிகழ்ந்தது.
இளையராஜாவுக்கும் ஆஷாவுக்கும் நிகழ்ந்தது பரிமாற்றம். ஆஷாவின் உள்ளீட்டை இளையராஜா தன் இசையில் அனுமதித்தார். மாறாக ஆஷா தள் குரலின் பிரவாகத்தை, தான் உருவாக்கிக்கொண்ட அடையாளங்களை அப்படியே இளையராஜாவின் பாடல்களுக்கு வழங்கினார். மறுபுறம் A.R.ரஹ்மான் ஒரு தேர்ந்த பொறியாளரைப் போல ஆஷாவின் குரலுக்குள் ஒளிந்திருக்கும் நுட்பங்களைப் பிரித்தெடுத்து தன் இசையில் இணைத்துக்கொண்டார். ரஹ்மானின் பாடல்களில் உலவும் யுவதியின் குரலுக்கு கூடுதல் மென்மையும், சீரான தன்மையும் உண்டு.
“சாத்து நடை சாத்து..” ஆஷா அடித்து ஆடும் களம் என்றால் அதே வகையில் வரும் “வெண்ணிலா வெண்ணிலா..” A.R.ரஹ்மானுடன் இணைந்து ஆஷா நிகழ்த்திய மென்மையான மறுவுருவாக்கம். Rangeela, Taal, Daud என தொடர்ந்து தன் படங்களில் ரஹ்மான் தந்தது ஆஷாவின் இத்தகைய நுட்பமான மறுவுருவாக்கங்களையே!
தமிழில் தன் உச்சரிப்பு குறித்தான சவால்களை “கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்..” பாடல் வரை ஆஷா எதிர்கொண்டார். ஆனாலும், தென் தமிழக கிராமத்துப் பெண்ணின் குரலாக “செண்பகமே செண்பகமே..” எனப் பாடும்போதும் , வட இந்தியப் பெண்ணின் குரலாக “நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..” எனப் பாடும்போதும், காட்சிகளைக் கடந்து பாடலின் ஜீவனும், அது தரும் ஆழ்மன உணர்வுகளாவுமே ஆஷா விஞ்சி நிற்கின்றார்.
ஆஷா பாடிய மொத்தப் பாடல்களையும் கணக்கில் கொண்டால் நாம் அவர் குறித்துப் பேசுவது மிகவும் சொற்பமானது. ஆனாலும் நினைவின் அடுக்குகளில் உறைந்திருக்கும் கோடி இசைக்குறிப்புகளை மீட்ட ஒரு நரம்பின் துடிப்பு போதும்தானே!
அஞ்சலி.
0 Comments