நெடுமரக்கரை இடுகாட்டிலிருந்து மகிழங்காடு நாற்பது நிமிட நடை. அங்கிருந்து பழங்குட்டையின் வலதுபுறம் பிரியும் ஒத்தையடிப் பாதையில் இருபது நிமிடம் நடந்தால் முதுகுப்பாறை. அம்மா தன்னுடைய நொண்டிக் காலை இழுத்து இழுத்து நடந்தால் இன்னும் கூடுதலாக அரைமணி நேரம் தேவைப்படும். பழங்குட்டைக்கு அருகில் இருக்கும் தரிசு மேடுதான் துல்லியமான இடம். அங்கு நின்று பார்த்தால்தான்  மண்ணுக்குள் புதைந்த பாதி உடலுடன் யார் மடியிலோ தலை சாய்ந்து கிடக்கும் முதுகுப்பாறையின் பக்கவாட்டு அழகை முழுமையாக ரசிக்க முடியும். வேறெந்த திசையிலிருந்து பார்த்தாலும் அது ஒரு வழக்கமான பாறை மட்டும்தான். 

அப்பாவின் இடது கையில் தொங்கிக் கொண்டிருந்த ராசி சில்க்ஸ் துணிப்பையில் பூஜை சாமான்களுக்கு மேல் இனிப்புச் சேவுப் பொட்டலங்களை அடுக்கி வைத்திருந்தார். நீண்ட குறுத்தொலைத் தோரணங்கள் பைக்கு வெளியே தலையை நீட்டி அப்பா எட்டுவைத்து  நடப்பதற்கேற்ப அசைந்து கொண்டிருந்தன. வலதுகையில் ரஸ்தாளிப் பழங்களையும், அவித்த பனங்கிழங்குகளையும் சணலில் கோர்த்து தொங்கவிட்டிருந்தார். அவர் உள்ளங்கையில் இன்னொரு முறை என் முகத்தை உரசிக்கொண்டேன். அப்பா என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தார். என்  கன்னங்களை மிருதுவாகக் குவித்து இழுத்து தன் விரல்களை முத்தமிட்டுக் கொண்டார். பாவனையான முத்தம்தான். என்னையே உறுஞ்சிக்கொள்வது போல இருந்தது. கயிறு திரித்துக் காய்த்துப் போன அவர் உள்ளங்கைகளில் மிருது கூடியிருந்தது. தண்ணீர் தெளித்த நார் பொதியைப் போல அவர் உடலில் எப்போதும் மிதமான வெட்பமும் குளிர்ச்சியும் கலந்திருந்தது. என்னைக் கொஞ்சும்போது அவர் முகம் மிகவும் பரிட்சையமான ஒரு குழந்தை போல் மாறிவிடும். 

அப்பா எனக்காக தன் நடையின் வேகத்தை மட்டுப்படுத்திக் கொண்டார். நான் அவர் உள்ளங்கையை இன்னும் கொஞ்சம் அழுத்தமாய்ப் பிடித்தபடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடந்தேன். பழங்குட்டையின் தண்ணீரை வெளிர் பச்சை நிற பாசி போர்த்தியிருந்தது. ஆங்காங்கே அல்லிகள் தலைநீட்டி அசைந்து கொண்டிருந்தன. தெற்கே அம்பலத்தார் வயலுக்கு அறுப்புக்குப் போகும் பெண்களைத் தவிர மலைப்பாதை ஆள் அரவமற்றுக் கிடந்தது. மரப்பட்டைகளைச் சிராய்த்துக்கொண்டு ஓடிய ஓணான் சற்று தூரம் சென்று தலையை நிமிர்த்தித் திரும்பிப் பார்த்தது. அப்பாவை இன்னும் கொஞ்சம் உரசியபடி நெருங்கி நடக்கத் துவங்கினேன். 

தென்னங் குருத்தோலையை கொடுவாக் கத்தியை கொண்டு கிழிக்கும்போது எழும் மிதமான வாசம் அப்பாவின் உடலில் எப்போதும் போல வீசிக்கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் கிறங்கச் செய்யும் மணம். பூக்களில் எழுவதுபோன்ற பகட்டான மணம் இல்லை. அது மிகவும் அந்தரங்கமானது. நாசியின் பிரத்யேக நரம்புகளைச் சுண்டிச் சுண்டி மனதை வசியப்படுத்தும். அப்போதெல்லாம் அப்பா மேற்சட்டை அணிவதில்லை. கட்டுக் கட்டாக திரண்டிருக்கும் அவர் உடலுக்கும், கறுத்த முதுகுப் பாறைக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. 

“கருத்தம்மை சிரிச்சா இப்பவும் எட்டு சுனையிலயும் இப்ப தண்ணி ஊறுமாப்பா?” எத்தனையாவது தடவையாக கேட்டேன் என்று நினைவில்லை. 

“கருத்தம்மை சாமிடா. அவ சிரிச்சுதானே காடு கரையெல்லாம் கனியிது."

கருத்தம்மையைப் பற்றி பேசத் தொடங்கினாலே அப்பாவுக்கு சன்னதம் வந்துவிடும். உதடுகள் துடிக்கும். கண்கள் மின்னத் துவங்கிவிடும். கைகளை அசைத்து புருவங்களை உயர்த்தி அவர் சொல்லும் கருத்தமை கதைகளுக்குள் புகுந்து கருத்தம்மையாகவே மாறிவிட வேண்டும் போலத் தோன்றும். கருத்தம்மை மீது அப்பாவிற்கு அவ்வளவு காதல். வீட்டில் அம்மா இருக்கும் நேரங்களில் அப்பா கருத்தம்மையைப் பற்றிப் பேசுவதில்லை. அப்படியே எப்போதாவது ஆரம்பித்தாலும் அம்மாவுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வரும். “தேக்கு மரமாட்டம் கட்டுனவன் இருக்கும்போதே, கவளம் உருட்ட வந்தனோட சரசம் பண்ணவதானே ” என்று வார்த்தைகளில் திராவகம் ஊற்றுவாள்.

ஒருவேளை கருத்தம்மை பற்றிய கதைகள் அனைத்துமே பொய்யாய் கூட இருக்கலாம். ஆனால் அப்பாவின் கதைகளை நான் நம்பினேன். எனக்கு கருத்தம்மையை பிடித்திருந்தது. கருத்தம்மையாக என்னை நினைத்துக்கொள்வது பிடித்திருந்தது. கருத்தமையைக் கொஞ்சும் அப்பாவையும் பிடித்திருந்தது. அம்மா கருத்தம்மையை கரித்துக் கொட்டும் போதெல்லாம் நான் ஓடிச்சென்று அப்பாவின் மடியில் புதைந்து கொள்வேன். கருத்தம்மை நினைவு வந்தாலே அப்பாவின் உடல் பஞ்சு போல இளகிவிடும். தன் வாழ்நாள் எல்லாம் பொத்திப் பாதுகாக்கும் ஏதோ ஒன்றைத்தான் அப்பா இந்த மலைக் காடுகளில் ஒளித்து வைத்திருந்தார். அதைத்தான் நானும் தெரிந்துகொள்ள விரும்பினேன். அது ரகசியமாய் இருப்பதாலேயே என்னக்குள் காட்டுச் செடிபோல வளர்ந்து கொண்டே இருந்தது. அந்த ரகசியத்தை எப்படியாவது என் வசமாக்கிக் கொள்ளவேண்டும் போல இருந்தது. அந்த ரகசியங்களின் ஊடே அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்கும் போதெல்லாம் இந்த மலைகாடே தழைந்து தழைந்து உடன் வந்தது.

கருத்தம்மை கதையின் மர்மங்களும், சுவாரஸ்யங்களும் எனக்குள் எப்போதும் குறுகுறுத்தன. மலை உச்சியில் எட்டு நன்நீர்ச் சுனைகள். ஒவ்வொரு சுனைக்கும் ஒவ்வொரு பிரத்யேகச் சுவை. ஒவ்வொன்றிற்குப் பின்னாலும் ஒரு கதை. மலையுச்சியில் அந்தரங்கமாக நடப்பட்டிருக்கும் நடுகற்கள். கருங்கற்களால் கீறப்பட்ட பெயர்களைத் தாங்கி நிற்கும் பாறைகள். அவற்றிற்கு மத்தியல் கருத்தம்மைச் சுனை. முதுகுப்பாறையைச் சுற்றியுள்ள மர்மங்களும், வசீகரங்களும் அப்பா எனக்கு அறிமுகம் செய்தவை. கருத்தம்மை நெடுமரக் கொல்லையில் கொம்பனையும், ஆனந்தியையும் வளர்த்தது தொடங்கி, அவள் முதுகுப் பாறையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட வரை அப்பாதான் எனக்குச் சொன்னார். நான் முதுகுப்பாறை குறித்து அப்பா சொன்ன கதைகளை மட்டுமே நம்பினேன்.

"கருத்தம்மையை கட்டிகிட்ட வைரவனுக்கு அவ அப்பனோட மலைக்காடுல மட்டும்தான் கண்ணு. தெனமும் சாராயம். கூத்தியா சகவாசம். ரெண்டு பேருக்கும் பேச்சுவார்த்த இல்லாம போயிடிச்சு. ஆனைங்களுக்கு தென்னம் மட்டைகளை வீசிப் போடவும், கவளம் உருட்டவும் என்னை மட்டும்தான் கருத்தம்மை கூப்பிடுவா. எனக்கு பதினேழு பதினெட்டு வயசிருக்கும். வைரவன் மனசில என்ன இருந்துச்சோ தெரியல. என்னை பகையாளி மாதிரிதான் பார்த்தான். இதே வைகாசி மூன்றாவது செவ்வாய்தான். மதமதன்னு வளர்ந்து சேர்க்கைக்கு தயாரா நின்ன கொம்பனும், ஆனந்தியும் அவன் வேட்டைத் துப்பாக்கிக்கு உசிர விட்டுதுங்க. அன்னைக்கு பொழுது சாயிரதுக்குள்ள கருத்தம்மை பாறையிலேர்ந்து குதிச்சுப் போய் சேர்ந்துட்டா. அவ விட்ட கண்ணீர்தான்…”

அப்பாவிற்கு மூச்சு இரைத்தது. மயிர்க்கால்கள் விரைத்துக் கொண்டு நின்றன. உடலை ஒருமுறை முறுக்கிக் கொண்டார். கையில் இருந்த பைகளோடும், பழத்தோடும் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி முதுப்பாறையை நோக்கி கும்பிட்டார். அவர் கன்னச்சதைகள் நடுங்கின. தாரையாக கண்ணீர் வழிந்தது.

கருத்தம்மை தற்கொலை செய்துகொண்ட பிறகே முதுகுப்பாறையில் நீர்ப்பெருக்குக் குறைந்து போனது. மண்ணிலும், மலையிலும் அவள் சாபம் தங்கிப்போனது. காட்டுப்பாதையை விட்டு யானைக்கூட்டம் விலகும்போதெல்லாம் கருத்தம்மை அலறும் சத்தம் மலைப்பாதையில் கேட்பதாக ஊர் முணுமுணுக்க ஆள் நடமாட்டமும் குறைந்து போனது. இதுவும் அப்பாதான் சொன்னார். முதுகுப்பாறையில் ஒருமுறை கூட நீர் ஆருவிபோல் பெருக்கெடுத்து இறங்குவதை நான் பார்த்ததில்லை. கன்னங்களில் வழிந்திறங்கும் நீர்க்கோடுகள் போல ஈரம் வழிந்து கொண்டிருக்கும். அவ்வளவுதான். மழைகாலத்தில் முதுகுப்பாறை இன்னும் கறுத்திருக்கும். அப்பாவுக்கு பயமெல்லாம் இல்லை. முகுப்பாறைச் சுனைக்கு என்னை கூட்டிப்போவதை நிறுத்தியதும் இல்லை.

மாலை நேரத்து வெயில் மலையடிவாரத்தில் தணிந்து இறங்கியிருந்தது. மழ மழவென சரளைக் கற்களின் மீது தண்ணீர் ஊர்ந்து கொண்டிருந்தது. நான் அப்பாவின் முதுகைப் பார்த்தவாறு கையில் பனங்கிழங்குகளுடன் உட்கார்ந்திருந்தேன். அப்பா நீர்வழிந்து கொண்டிருக்கும் ஒரு பாறைக்குப் பக்கத்தில் தேங்காய் மற்றும் பழங்களைப் பரப்பி வைத்திருந்தார். பத்தியின் புகை கொத்துக் கொத்தாக சுருண்டு காற்றில் கலந்தது. வெற்றிலை மீது சிவப்பேறிய எழுமிச்சைகளுக்கு மத்தியில் சூடத்தின் சுடர் காற்றில் இடமும் வலமுமாக அலைந்து கொண்டிருந்தது. அப்பா மீண்டும் கருத்தம்மைச் சுனையைப் பற்றி சொல்லத் துவங்கினார். 

*

அம்மா, நான் மற்றும் மாரி உட்பட மொத்தம் பன்னிரண்டு பேர்தான் முற்றத்தில் நின்று கொண்டிருந்தோம். நானும் அம்மாவும் மட்டுமே பெண்கள். இழவுக்குக் கூட வேறு பெண்கள் யாரும் வருவதற்கு வாய்ப்பில்லை. முற்றத்தில் மாரி பையைத் திறந்து தேங்காய், வாழைப்பழம், ஊதுபத்தி, சூடம், வெற்றிலை சீவல் என ஒவ்வொன்றாக எடுத்து தரையில் விரித்து வைத்தான். அப்பா கரடுமுரடான கரும்பச்சை நிற மரபெஞ்சில் கிடத்தப்பட்டிருந்தார். அவர் வாயிலிருந்து இன்னும் மண்ணெண்ணெய் வீச்சம் வீசிக்கொண்டிருந்தது. கல் உப்புத் துணுக்குகள் மீசையில் ஒட்டிக் கொண்டிருந்தன. மாரி கொஞ்சம் வெற்றிலைகளை கிழித்து அதில் கைகொள்ளும் அளவிற்கு சீவலைத் திணித்து இரண்டு உள்ளங்களைகளாலும் சுழற்றிச் சுழற்றிக் கசக்கினான். பின்னர் ஒரு வெள்ளை நிற வேட்டியின் ஒரு மூலையைக் கிழித்து எழுமிச்சை அளவு திரண்டிருந்த வெற்றிலை சீவலை அப்பாவின் வாயில் திணித்து தாடை இறுகும் அளவிற்குத் தலை உச்சியில் இழுத்துக் கட்டினான். 

அப்பா தன் மீசையை நேர்த்தியாகக் கத்தரித்திருந்தார். முகத்தை வழவழவென்று கூழாங்கல்லைப் போல மழித்திருந்தார்.  முதன்முறையாக தன் தாடியை அவர் மழித்தது எனக்காகத்தான் என்று அம்மா சொல்லுவாள். நான் அப்பாவின் கன்னங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா நேற்றைவிட இன்று இன்னும் கொஞ்சம் மெருகேறியிருந்தார். தோளில் பளபளப்பு கூடியிருந்தது. இறந்தவர்களின் முகத்தில் இப்படி ஒரு தேஜஸ் சாத்தியமே இல்லை. அப்பா முற்றத்தில் வந்திறங்கும் நிலவொளியில் அயர்ந்து உறங்குவதைப் போலத்தான் கிடந்தார். முகத்தில் சின்ன நிம்மதி. அடிக்கடி ரகசியமாக உதடுகளை லேசாக சுழித்துப் புன்னகைப்பது போல இருந்தது. நான் தாவணித் தலைப்பை வாயில் புதைத்தபடி அப்பாவை ரசித்துக் கொண்டிருந்தேன். தூணின் சாய்ந்து அழுதுகொண்டிருந்த அம்மா திடீரென்று என்னை கவனிப்பதுபோல ஒரு உள்ளுணர்வு எழுந்தது. பார்வையை திண்ணையின் பக்கம் திருப்பிக் கொண்டேன். படி நெல்லின் மீது ஏற்றப்பட்ட நல்லவிளக்கின் சுடர் தயங்கிக் தயங்கி அசைந்து கொண்டிருந்தது.

திண்ணையின் மூலையில் குருத்தோலைத் தோரணங்கள் குவிந்து கிடந்தன. முந்தியை இழுத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டேன். அழுகையெல்லாம் வரவில்லை. கூந்தலைச் சுழற்றித் தலைக்குப் பின்னால் சொருகியபடி எழுந்தேன். அழுது கொண்டிருப்பவர்களைப் பார்த்து எனக்கு ஆத்திரமாக வந்தது. திண்ணைக்குச் சென்று அப்பா பின்னியிருந்த குருத்தோலைத் தோரணங்களை அள்ளிவந்து முற்றத்தில் தொங்கிக் கொண்டிருந்த கொடியில் கட்டத்துவங்கினேன். அம்மா “எடுபட்ட சின்னச்செறுக்கி… இங்க என்ன கூத்தா நடக்கு… அப்பனப்போலவே கிறுக்கு பிடிச்சிருக்கோ...”  என்று கத்தியபடி தலையில் அடித்துக்கொண்டு ஓடிவந்தாள் என்னை கீழே தள்ளினாள். மாரிதான் அவளை தடுத்து நிறுத்தினான்.

“விடுத்தா… அப்பன் நெஞ்சுல என்ன கிடந்துச்சுன்னு அதுக்குதான் தெரியும்”. அம்மா பிரம்மை பிடித்தவள் போல் நின்றுவிட்டாள். “ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்” என்று வாயாலும் மூக்காலும் மூச்சு விட்டாள்.

நான் சேலையை இழுத்தபடி எழுந்து உட்கார்ந்து அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். அப்பாவின் வசீகரம் அம்மாவிடம் இல்லை. அப்பாவின்  நேசத்திற்கும் அம்மா பொருத்தமானவள் இல்லை. அவர் அருமை கருத்தம்மைக்குத்தான் தெரிந்திருக்கும். நான் கூட அப்பாவுக்குப் பிடித்த கருத்தம்மை மாதிரிதான். நான் அப்பாவின் விரும்பினேன். அப்பாவின் நேசத்திற்கு பொருத்தமானவளாய் இருந்தேன்.

அப்பாவைப் பார்த்தேன். மரபெஞ்சில் சிரித்தபடி உறங்குவது போலத் தெரிந்தார்.

*

தண்ணீரின் சலசலப்பைப் போல மனமும் சலசலத்துக் கொண்டிருந்தது. மலையடியாவாரத்தில் வேறெந்த சப்தமும் இல்லை. ஏற்றி வைத்த பத்தியின் சாம்பல் பாறையின் மீது நீர்ப்போக்கின் தடங்கள் போல படர்ந்திருந்தது. வெற்றிலையின் மத்தியில் சூடம் கருப்பாக குழைந்து குங்குமச்சாறோடு கலந்து கிடந்தது. அப்பா அக்குழைவை விரலில் அள்ளி என் நெத்தியில் பூசினார். ஒரு கணம் என்னை கருத்தம்மையாகவே உணர்ந்தேன். நெற்றிப் புள்ளியில் சில்லிட்ட ஈரம் கிறுகிறுத்தது. என்னால் அப்பாவின் அருகாமையிலிருந்து விலக முடியவில்லை. அவர் கன்னங்களில் எக்கி முத்தமிட்டேன். அப்பாவின் உடல் சூட்டில் சுருங்கிக்கொள்ள வேண்டும் போல இருந்தது. எதற்காகவோ காத்திருந்தேன். அவர் கண்களில் அமைதியைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. சற்று நேரம் கழித்து கீழே இறங்கினோம். தூரத்தில் காட்டு யானைகள் பிளிறின.

அன்று வீடு திரும்பியதுமே அம்மாவும் ஏதையோ புரிந்து  கொண்டாள். மூர்க்கம் கூடிப்போனாள். அன்றிலிருந்து அப்பாவுடன் எனக்கு கிடைக்கும் தனிமையாக நேரங்களை திட்டமிட்டு சிதைக்கத் துவங்கினாள். அக்கம் பக்கத்து பெண்களிடம் நடந்துகொள்வதைப் போலவே என்னிடமும் தேவையில்லாமல் எரிந்து விழத்தொடங்கினாள். வயதுக்கு வந்த பெண்கள் பழங்குட்டையை கடப்பது ஆகாது எனக் அப்பாவிடம் புதுக்கதை சொன்னாள்.

பருவமடைந்த நாட்களுக்கு முன்பெல்லாம் என்னை தெருப்பிள்ளைகளோடு விளையாட விரட்டிக்கொண்டிருந்த அம்மா, அதன்பிறகு நான் அப்பாவை நெருங்கும் போதெல்லாம் வீட்டுக்குள்ளும் விதிமுறைகளைக் கொண்டுவந்தாள். அப்பாவின் தொடை மீது படுக்கும் போதெல்லாம் கூடுதலாய் முற்றத்தில் பாத்திரங்களை கழுவப் போட்டாள். அப்பாவிற்கு பொருத்தமில்லாத முண்டா பனியன்களை வாங்கித் தந்தாள். “வயசுப்புள்ளய என்ன கொஞ்சிகிட்டு?” என்பாள். அது எனக்குச் சொல்வதுதான். நான்தான் அப்பாவை கொஞ்சுவேன். அவர் முதுகில் ஏறிக்கொள்வேன். அவரை இறுக்கி அணைத்து முத்தமிடுவேன். 

அம்மா இல்லாத நேரங்களில் நான் அப்பாவோடு முதுகுப்பாறைக்குச் செல்ல விரும்பினேன். அம்மா இன்னொரு பக்கம் டெய்லர் கடை பார்த்தசாரதி புரோக்கரிடம் சொல்லி வரன் பார்க்கத் தொடங்கினாள். அப்பாவுக்கும் என்னைப் பிரிய மனமில்லைதான். ஆனாலும் அவர் அம்மாவைத் தடுக்கவில்லை. கிழட்டு புரோக்கர் வாயெல்லாம் வெற்றிலைக் கரையோடு சுற்றிக்கொண்டிருந்த மாப்பிள்ளைகளை அழைத்து வந்தான். பெண் பார்க்க வந்த ஒருவன் வாசல் கதவைப் பிடித்துக்கொண்டே தள்ளாடியபடி வந்தான். அப்பா குடிப்பார். ஆனால் தள்ளாடிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததில்லை. நல்ல வாட்டசாட்டமான மாப்பிள்ளை ஒருவனையும் ஏதேதோ காரணம் சொல்லித் தட்டிக் கழித்தேன். எனக்குப் பிடிக்கவில்லை. வந்தவன்களில் ஒருத்தனுக்குக் கூட அப்பாவின் ஜாடை இல்லை. என்னால் அப்பாவைத் தவிர யார் அருகிலும் ஒரு பாதுகாப்பை உணரமுடியவில்லை. அம்மா தலையை விரித்துப் போட்டபடி நடுவீட்டில் உட்கார்ந்து கரித்துக் கொட்டினாள். “நாசத்துப் போவடி” என சாபம் விட்டாள். நான் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் அப்பாவின் கன்னங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். 

அடிக்கடி நான் இல்லாத நேரங்களில் அப்பாவோடு அம்மா வாக்குவாதம் செய்தாள். சில நேரங்களில் நான் இருந்தபோதும், என் இருப்பு அவளுக்குத் தெரியாத மாதிரி காட்டிக்கொண்டு, “சக்களத்திச் சிறுக்கிக்கு நீயும் தொண போறியோ?” என்று ஜாடை பேசினாள். அப்பா கோபமே வராதவரெல்லாம் இல்லை. ஆனால் அந்த ஜாடைப் பேச்சுக்கெல்லாம் அவர் தன் குரலை உயர்த்தவே இல்லை. நான்தான் “அப்பா நான் உன்கூடவே இருந்துடுறேன். எனக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம்” என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். யாருக்கும் தெரியாமல் அப்பாவின் பனியன்களை செங்கல் ஜல்லிகளைச் சுற்றி புழக்கடையில் இருக்கும் கிணற்றில் வீசினேன்.

ஒருநாள் மதிய வெயில் நேரத்தில் நிலையில்லாமல் வாசலுக்கும் முத்தத்திற்கும் அலைந்து கொண்டிருந்த அம்மா திரிப்புக் கூலியை என் கையில் திணித்து மாரிக்கு கொடுத்துவரச் சொன்னாள். அன்று எல்லாம் வழக்கத்துக்கு மாறாக இருந்தது.  ஏதோ கத்தி முடித்திருப்பாள் போல. அப்பா வழக்கம்போல் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். நான் திரும்பி வரும்போது உச்சி வேளையில் அம்மா வாசல்கதவை உள்தாழ்ப்பாள் போட்டிருந்தாள். அப்பா முனகும் சத்தம் கேட்டது. இற்றுப்போயிருந்த கதவிடுக்கின் வழியாக எட்டிப் பார்த்தேன். பத்தாயத்து இடுக்கில் தன் நொண்டிக்காலை இழுத்தபடி ஆவேசமாக அப்பாவின் மேல் இயங்கிக் கொண்டிருந்தாள். ஆவேசமாய் கத்திக்கொண்டே கதவை இடித்தேன். அம்மா தலையை நிமிர்த்தி கதவை நோக்கி வெறித்தாள். அன்று அவள் முகம் அவ்வளவு விகாராமாய் இருந்தது. உடல் முழுவதும் வியர்த்திருந்தது. சவுரி அவிழ்ந்து தூரத்தில் கிடக்க, மீதமிருந்த கத்தை தலைமயிறும் அலங்கோலமாய் முகத்தில் படர்ந்து கிடந்தது. வினோதமாய் கதவைப் பார்த்து ஒலி எழுப்பியவள், மீண்டும் அப்பாவின் மீது ஒரு வேட்டை நாய்போல பாய்ந்தாள்.

எனக்குத் தெரியும். அப்பாவிற்கு என்மேல் கோபமோ வருத்தமோ இல்லை. என் கோபம் அம்மா மேல்தான் இருந்தது. ராட்சசி! அவள்தான் என்னை அப்பாவிடமிருந்து பிரிக்க நினைக்கிறாள். நான் அவள் இடத்தை பிடித்துக்கொள்வேன் என்று பயப்படுகிறாள். நாளாக நாளாக அம்மாவின் மூர்க்கம் அதிகமானது. வெக்காளி அம்மன் கோயில் பூசாரியை அழைத்துவந்து எனக்கு பேய் ஓட்டினாள். உடம்பை முறுக்கி, நாக்கை சுழட்டியபடி முற்றத்தில் சாமியாடினாள். ஆனால் அப்பா அம்மாவிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. கயிறு திரிக்கப் போவதை நிறுத்தியிருந்தார். திண்ணையில் உட்கார்ந்தபடி பொழுதைக் கழித்தார்.

அம்மா அப்பாவை உதாசீனப் படுத்தினாள். அப்பா பல மாதங்கள் திண்ணையே கதியாகக் கிடந்தார்.  உடல் இளைத்தது. கண்கள் குழிக்குள் விழுந்தன. சீந்துவார் இல்லாதவர் போல முற்றிலும் தளர்ந்துபோனார். ஒரு நாள் தட்டுத் தடுமாறி வீட்டுக்குள் நுழையும்போது நிலையில் தலையை இடித்துக்கொண்டு சுருண்டு விழுந்தார். நான் அம்மாவைச் சபித்தேன். அப்பாவின் வலதுகையும், வலதுகாலும் நிரந்தரமாய் முடங்கிப் போனது. கொஞ்சநஞ்சம் இருந்த பேச்சும் குறைந்து போனது. அன்றாடங்களுக்கு அப்பா சிரமப்படத் துவங்கினார். அவருக்கு ஒத்தாசை செய்ய  எப்போதும் இன்னொரு துணை தேவைப்பட்டது. 

அம்மாவும் சிரமப்பட்டாள். “அப்பா முடமானதுல உனக்கு சந்தோஷம்தானே.” என நான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவளை வார்த்தைகளால் குத்திக் காட்டினேன். நான் அம்மாவை அதிகமாக வெறுத்தேன். அப்பாவைவிட்டு விலகாமல் நேரத்தைக் கழிக்கத் துவங்கினேன். என் குத்தல் பேச்சுக்களை விட அப்பாவின் மௌனம் அம்மாவை கிழித்து வீசியது. அம்மா கொஞ்சம் மனமிறங்கி வந்தாள். அவள் நடத்தையில் ஒரு ஆசுவாசம் தென்படத் துவங்கியிருந்தது. அப்பாவை தினமும் முற்றத்தில் உட்காரவைத்து குளிப்பாட்டத் துவங்கினேன். அம்மா தன் காட்டன் சேலையை தூண்களில் மறைப்புக்கு கட்டினாள். தன் இழுத்த வாகுக்கு இடதுகையும், காலும் ஒத்துவராமல் அப்பா முதலில் சிரமப்பட்டார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ப்புப் பிராணியைப் போல ஓய்ந்து போனார். பழங்குட்டை தரிசு மேட்டில் உட்கார்ந்திருப்பது போல குளிக்கும்போது அமைதிகாக்கத் துவங்கினார். அப்போதும் அப்பா தன் வசீகரம் குறையாதவராகவே இருந்தார். அரப்பும் எண்ணையும் குழைத்து அவர் உடலில் பூசும்போது என் மனம் சிலிர்த்துக் கொண்டது. அப்பாவை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுக்க விரும்பினேன்.

அவரின் உடற்கட்டுகள் தளர்ந்த போதும் குருத்தோலையின் வாசம் குறைவதாய் இல்லை. அவர் உடலை நான் தேய்த்துவிடும் போதெல்லாம் அதே அமைதி. என் மனதில்தான் ஏதோ ஒன்று குடைந்துகொண்டே இருந்தது. அப்பா மனதளவில் திடமாகத்தான் இருந்தார். ஆனால் அவர் செத்துப்போவார் என்று அடிக்கடி நானே நினைத்துக் கொண்டேன். ஒருவேளை எதுவும் சொல்லாமலே அவர் செத்துப் போய்விட்டால் என்ன ஆகும் என்று பயம் தொற்றிக்கொண்டது. ஆனால் அவரிடம் எதை எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. 

அன்றும் அம்மா வழக்கம் போல் மறைப்பை கட்டினாள். பித்தளைக் குவளையில் வெந்நீர் விளாவினாள். அப்பா பாறைபோல முத்தத்தின் நடுவில் அமர்ந்திருந்தார். தலையில் ஊற்றிய தண்ணீர் இறுக்கம் தளர்ந்த அவர் உடலின் மீது நழுவி ஓடியது. இடுப்பில் அரப்பைத் தேய்க்கும்போது வித்தியாசமாக நெளிந்தார். சுதாரிப்பதற்குள் நீரின் போக்கோடு இடுப்பில் கட்டியிருந்த துண்டு தண்ணீரில் நழுவியது. உடம்பில் பொட்டுத் துணியில்லாத உணர்வே இல்லாதது போல அப்படியே அமர்ந்திருந்தார். இதுவரை அப்பாவை அப்படி மட்டும்தான் பார்த்ததில்லை. அவசரமாக ஈரத்துண்டை எடுத்து அவர் இடுப்பில் சுற்றுவதற்கு நிமிர்ந்தேன். அப்பா குனிந்து என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கிருந்த படபடப்போ பதற்றமோ அவர் பார்வையில் கொஞ்சமும் இல்லை. அப்பாவின் வயிறு சுருங்கிக் கிடந்தது. கயிறு திரிக்கும்போது இடுப்பில் சுமக்கும் நார்கூடையின் தடம் வடம் போல சுற்றிக்கிடந்தது. இடுப்பிற்குக் கீழ் சின்னச் சின்ன காயங்கள், தழும்புகள். தளர்ந்து சுருங்கிப்போன ஆண்குறி. அப்பா துவண்ட கொடிபோல் நின்றிருந்தார். ஆனால் என்னால் அவரை அப்போதும் விட்டுத்தர முடியவில்லை. அழுகை நெஞ்சை முட்டிக்கொண்டு வந்தது. அப்பாவைத் தூக்கி தோளில் போட்டபடி துண்டை இடுப்பில் சுற்றி உட்கார வைத்தேன். என்னை ஏதோ இன்னும் குடையத் துவங்கியது. நெஞ்சுக் கூட்டை அடைத்த ஏதொவொன்று திரண்டு தலைக்கு ஏறியது. பட்டென்று சிதறியது.  

“அப்பா.. நான் உன்னத் தொட்டுக் குளிப்பாட்டுறப்ப  உனக்கு என்னவோ போல இல்லையா..” அவ்வளவுதான் என்னால் கேட்க முடிந்தது. அதற்குமேல் வார்த்தைகள் எழாமல் குரல் உடையத் துவங்கியது. உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.

அப்பாவிடம் அதே அமைதி. பின்னர் ஒருபக்கமாக உதடுகளை லேசாகச் சுழித்துப் புன்னகைத்தார். இடது கையை என்னை நோக்கி உயர்த்தினார்.  நான் அவர் அணைப்புக்கு ஏங்கினேன். அவர் கை காற்றில் அலைந்து அலைந்து என் தோளில் விழுந்து அடங்கியது. அப்பாவால் அவ்வளவுதான் முடிந்தது. அப்பாவின் முகத்தை என் வயிற்றில் புதைத்துக் கொண்டேன். விம்மி விம்மி அழத்தோடங்கினேன். அப்பா உடம்பிலிருந்த ஈரம் என் வயிற்றில் இதமாகப் படர்ந்தது. 

என் உடல் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வழுக்குப் பாறையில் நழுவுவது போல் இருந்தது. கையிலிருந்த அரப்புக்கிண்ணம் தரையில் விழுந்து சுழன்றது. நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது. எதையாவது பிடித்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. “அப்பா என்ன விட்டுடாதப்பா.. எனக்கு நீ வேணும்ப்பா…” என்று ஆவேசமாக மீண்டும் மீண்டும் கத்தத் துவங்கினேன். தலையைக் குனிந்து அப்பாவின் முகமெங்கும் ஆவேசமாய் முத்தமிட்டேன். அம்மா சித்தபிரம்மை பிடித்தவள் போல தூணில் உறைந்து நின்றபடி எங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். தரையெங்கும் அரப்பு நீரில் எண்ணெய்த் துளிகள் ஒட்டியும் ஒட்டாமலும் மிதந்து கொண்டிருந்தன.

*

மாரி அப்பாவை குளிப்பாட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். முத்தழகு மாமாவும் மற்ற ஆண்களும் அப்பாவைச் சுற்றி வேட்டியால் ஒரு மறைப்பை கட்டியதும், மாரி அப்பாவின் உடலை மடக்கி பலகையில்  உட்காரவைத்தான். வாசலில் கற்பூரம் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விராட்டியிலிருந்து புகை மூட்டம் கிளம்பி முற்றத்தை நிறைத்தது. முற்றத்தில் வந்து விழுந்த வெயிலில் மறைப்புக்கு பின்னால் அப்பா ஒரு கறுத்த பாறைபோலத் தெரிந்தார். அவர் முதுகிலிருந்து நீர்க்கோடுகள் இறங்கிக் கொண்டிருந்தன.